நாளுக்கு நாள் கடுமையான கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைவர்க்கும் ஐசியு படுக்கைகள் கிடைப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், சமீபத்தின் பான்-இந்தியா கணக்கெடுப்பில், ஐசியு படுக்கை தேவைப்படுகிற 4 சதவிகித கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே வழக்கமான செயல்முறை மூலம் அதைப் பெற முடிகிறது என்றும் 78 சதவிகித பேர் தெரிந்தவர்கள் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் 92 சதவிகிதம் பேர், அனைத்து மருத்துவமனைகளிலும் நிகழ் நேர ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை பற்றி தங்களின் வலைத்தள பக்கம் மற்றும் மருத்துவமனை நுழைவாயில்களில் பட்டியலிடுவதைக் கட்டாயமாக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். புனேவில், குறைந்தது 32 சதவிகிதம் பேர் தங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி படுக்கைகளை வாங்கியுள்ளனர். 5 சதவிகிதம் பேர் வழக்கமான செயல்முறையின் மூலம் படுக்கைகளைப் பெற்றுள்ளனர்.
அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் கிடைக்காமல், நாடு முழுவதிலுமிருந்து பல புகார்களைப் பெற்ற பின்னர், மக்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு உதவும் கொள்கை மற்றும் அமலாக்கத் தலையீடுகளுக்கான சிக்கல்களைக் கையாளும் சமூக ஊடக தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் (LocalCircles), இந்தப் பிரச்சனைக்கான தீர்வு காணக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 211-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 17,000-க்கும் மேற்பட்ட பதில்களைப் பெற்றுள்ளதாக லோக்கல் சர்க்கிள் அமைப்பின் நிறுவனர் சச்சின் தபாரியா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
முதல் கேள்வியாக, கோவிட் ஐசியு படுக்கையைப் பெறுவது தொடர்பாக சமூக அமைப்பில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் கேட்டுள்ளனர் லோக்கல் சர்க்கிள்ஸ். சரியான கருத்துக்கள் வருகிறதா என்பதை உறுதிசெய்ய, மக்கள் தங்கள் தொடர்பிலிருக்கும் கோவிட் ஐசியு அனுபவம் பெற்ற நபர்களிடமிருந்து கருத்துக்களை வாங்கிப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்குப் பதிலளித்த 55 சதவீதம் பேர், தங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் கோவிட் ஐசியு படுக்கை தேவைப்படும் நபர்கள் யாருமில்லை என்று கூறியுள்ளனர். இந்த பதிலளித்தவர்கள் கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது, பதிலளித்த 38 சதவிகித பேர் ஐசியு படுக்கை வேண்டும் என்பதற்காகத் தெரிந்தவர்களின் உதவி மற்றும் செல்வாக்கினைப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். 7 சதவிகிதம் பேர் ஐசியு படுக்கைப் பெறத் தொடர்ச்சியாக மருத்துவமனையைப் பின்தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர்; 40 சதவீதம் பேர் ஐசியு படுக்கைக்காக தங்களது செல்வாக்கினைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து தேவைப்பட்டால் சமூக ஊடகங்கள் வழியாக அல்லது அரசாங்கத்திடம் புகார் செய்ய நேரிடுகிறது என்று கூறியுள்ளனர்; ஐசியு படுக்கைக்காக மருத்துவமனை / அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று 7 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்; 4 சதவிகிதம் பேர் மட்டுமே மேலே குறிப்பிட்டவற்றில் எந்தவித அவசியமும் இன்றி ஐசியு படுக்கை கிடைத்ததாகக் கூறினர். 4 சதவிகிதம் பேர் தங்களுக்கு ஐசியு படுக்கையே கிடைக்கவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.
ஐசியு படுக்கை தேவைப்படுபவர்களில் 4 சதவிகிதம் பேர் மட்டுமே வழக்கமான செயல்முறையின் மூலம் அதனைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை இந்த கணக்கெடுப்பு உணர்த்துகிறது. உதாரணமாக, தில்லி அரசாங்க செயலியான ‘டெல்லி கொரோனா’வில், சில மருத்துவமனைகளில் ஐசியு படுக்கை இருக்கிறது என்று காட்டுகிறது ஆனால், மருத்துவமனையை அழைக்கும்போது படுக்கை இல்லை என்கிற பதில் வருகிறது என்று நோயாளிகள் புகார் கூறினர் என தபாரியா கூறினார்.
அடுத்த கேள்வியில், கோவிட்-19 நோயாளிகளுக்கு ஐசியு படுக்கைகளில் பற்றாக்குறை இருப்பதால், அனைத்து மருத்துவமனைகளும் தங்கள் வலைத்தளங்களில் நிகழ் நேர ICU படுக்கையின் எண்ணிக்கையைப் பட்டியலிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்றதற்கு, 92 சதவிகிதம் பேர் அதற்கு ஆதரவாகப் பதிலளித்தனர்.
புனேவிலிருந்து, 1,157 பதில்கள் வந்ததாக தபாரியா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். கோவிட் நோயாளிகளுக்கு ஐசியு படுக்கைகளைப் பெறுவதில் இருக்கும் அனுபவம் குறித்த கேள்விக்கு, 653 பதில்கள் கிடைத்தன. ஒரு படுக்கையைப் பெறுவதற்குக் குறைந்தபட்சம் 32 சதவிகிதத்தினர் தங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்று பதிலளித்தனர். 5 சதவிகிதத்தினர் வழக்கமான செயல்முறையின் மூலம் அதைப் பெற்றுள்ளனர் என தபாரியா கூறினார்.
“இரண்டாவது கேள்விக்கு, எங்களுக்கு 504 பதில்கள் கிடைத்தன. அதில், 88 சதவிகிதம் பேர் மருத்துவமனை வலைத்தள பக்கங்களில் நிகழ் நேர ஐசியு படுக்கையின் எண்ணிக்கையைக் கட்டாயமாகக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்” என தபாரியா தெரிவித்தார்.