செவ்வாய், 22 செப்டம்பர், 2020

”காவல்நிலையம் செல்லாமலே புகார் அளிக்கலாம்”: புதிய செயலியை அறிமுகம் செய்த ஆந்திர முதல்வர்!

 

Image

'AP Police Seva' என்ற மொபைல் செயலியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம் செய்துள்ளார்.

'AP Police Seva' செயலி மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களையும் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது. இச்செயலியின் மூலம் புகார்களை பதிவு செய்தல், FIR-ன் நிலை அறிதல், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் தடையில்லா சான்று பெற விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். சுமார் 87 வகை சேவைகளை இதன் மூலம் பெற முடியும். இதில் பெண்களின் பாதுகாப்புக்காக மட்டும் 12 சேவைகள் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

இந்த செயலி மூலம் புகார் தெரிவித்தால், அதற்கான ரசீதும் ஆன்லைன் வழியாக அனுப்பப்படும். அதேபோல் அவசர நிலைகளில் புகார் தெரிவிப்பது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வீடியோ கால் மூலம் போலீசாரை தொடர்பு கொள்ளும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகள் ஏற்பட்டால் அது குறித்து அருகாமையில் இருக்கும் காவல்நிலையத்திற்கு எச்சரிக்கையையும் இச்செயலி அனுப்பும்.

காவல்துறையினரை மக்களுடன் எளிதாக இணைக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி கவுதம் சவாங் தெரிவித்துள்ளார். இந்த புதிய முறை மூலம் காவல்துறையில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் அதிரடி அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.