செவ்வாய், 15 செப்டம்பர், 2020

6 முன்னாள் நீதிபதிகள்.. 25 வழக்கறிஞர்கள்.. நீதியரசர்கள் ஒன்று சேர்ந்து சூர்யாவுக்காக கொடுத்த குரல்

  நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமைசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு 6 முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

நீட் தேர்வு நடத்தப்பட்டதை கண்டித்து சூர்யா தனது ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத என உத்தரவிடுகிறது என சூர்யா நீதிமன்றம் குறித்து தெரிவித்திருந்தார். நீட் தேர்வுக்கு எதிரான சூர்யாவின் இந்த அறிக்கை தேசிய அளவில் கவனம் பெற்றது. எனினும், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு ஆதரவுக் கரம் நீண்டனர். இது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றது எனக் கூறிய நீதிபதி சுப்பிரமணியன், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவதற்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம்,
அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், “4 மாணவர்கள் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும் அதில் தெரிவித்துள்ளனர். இந்தக் கடிதம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் பெயரில் எழுதப்பட்டு அடியில் ஓய்வு நீதிபதி சந்துரு கையெழுத்திட்டுள்ளார்.

அதே போல், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். நடிகர் சூர்யா மீதான நடவடிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.