வெள்ளி, 25 செப்டம்பர், 2020

கொரோனா தடுப்பூசி: 3ம் கட்ட பரிசோதனைக்கு முன்னேறிய ஜான்சன் & ஜான்சன்

 ஜான்சன் & ஜான்சன் உருவாக்கிய கொரோனா நோய்த் தொற்று தடுப்பு மருந்து  3-வது கட்டமாக, பரிசோதனை முயற்சியை அமெரிக்காவில்  நேற்று  தொடங்கியது.  3ம் கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட  நான்காவது  தடுப்பூசி மருந்து இதுவாகும். அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர், மாடர்னா  ஆகிய தடுப்பு மருந்துகள் ஏற்கனவே அமெரிக்காவில் 3ம் கட்ட சோதனைகளுக்கு முன்னேறியுள்ளன. இருப்பினும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்து பரிசோதானை தற்காலிகமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளது  .

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் மருந்து கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற முன்னணி தடுப்பூசிகள் யாவும் இரண்டு அல்ல பலமுறை அளிக்கப்படும் டோஸ் தடுப்பூசியாக உள்ளன.  எவ்வாறாயினும், 3ம் கட்ட  மருத்துவ சோதனைகளின் முடிவில் தான் ஒற்றை டோஸ்  தடுப்பூசி திறம்பட செயல்படுமா? என்பது தெரிய வரும்.

ஒற்றை டோஸ் தடுப்பூசி முறை பல நன்மைகளைக் கொண்டுள்ளன. தற்போதைய அவசரகால சூழ்நிலையில்,  மற்ற  தடுப்பு மருந்தோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு நோயாளிகளுக்கு தடுப்பூசியை போடலாம்.  மேலும்  குறைந்த செலவில், அதிகமான மக்களுக்கு நோய்த் தொற்று தடுப்பதற்கான தடுப்பூசிகள் அளிப்பதை உறுதி செய்யலாம்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது பரிசோதனை முயற்சியை மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் நிறைந்த 60,000 பேரிடம் மருந்தை  சோதிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபைசர் அதன் தடுப்பூசியை 44,000 பேருக்கும், மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை தலா 30,000 பேரிடம் சோதனை நடத்த இருக்கின்றன.

ஜான்சன் அண்ட் ஜான்சன் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செயல்திறன் குறித்த தரவைப் பெறும் என்று  எதிர்பார்க்கிறது . மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா அறிவித்த கால அட்டவணையோடு ஒத்திப்போகும் வகையில் இது உள்ளது . அதே சமயம், ஃபைசர்  நிறுவனம் அக்டோபர் இறுதிக்குள் செயல்திறன் தரவைப் பெறும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது.

முடிவுகள் திருப்திகரமாக இருந்தால், அவசரக்கால பயன்பாட்டுக்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது . அமெரிக்காவின் ஒழுங்குமுறை அமைப்பான அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் , 3ம் கட்ட  சோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே, நன்மைகள் அதிகம் காணப்படும் தடுப்பு மருந்துக்கு  வரையறுக்கப்பட்ட அவசரக்கால மருந்துப் பயன்பாடு என்பதன் கீழ் அனுமதி வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோடெக்  நிறுவனம் அமெரிக்காவில் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் உருவாக்கி வரும் கொரோனா தடுப்பு மருந்தின் ஒரு பில்லியன்  டோசை தயாரித்து விநியோகிக்க இருக்கிறது.

இந்த தடுப்பூசிக்கான மனிதப் பரிசோதனைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அமெரிக்கா, ஐரோப்பா தவிர மற்ற சந்தைகளுக்கு தடுப்பு மருந்தை தயாரித்து,  விநியோகிக்கும் பிரத்யேக உரிமைகளை பாரத்  பயோடெக்  நிறுவனம் பெற்றுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான  கோவாக்சின்  தடுப்பு மருந்து, 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது .

வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் உருவாக்கும் தடுப்பு மருந்து ஒற்றை டோஸ் முறை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசிப் பந்தயம்: 

உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை: 187

38 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது.

9 தடுப்பூசிகள் 3ம் கட்ட பரிசோதனைக்கு முன்னேறியுள்ளது.

எட்டு இந்திய நிறுவனங்கள் கோவிட்-19க்கான தடுப்பூசியை  உருவாக்கி வருகின்றன. அதில், இரண்டு மட்டுமே 2ம் கட்ட மனித பரிசோதனைக்கு முன்னேறியுள்ளது. இந்த தடுப்பூசிகள் எதுவும் 2021 க்கு முன்னர் வெகுஜனப் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்க வாய்ப்பில்லை

முன்னணி தடுப்பூகள்: 

* அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
* மாடர்னா
* ஃபைசர் / பயோஎன்டெக்
* ஜான்சன் & ஜான்சன்
* சனோஃபி / கிளாக்சோஸ்மித்க்லைன்
* நோவாவேக்ஸ்
* ரஷ்ய தடுப்பூசி
* சீனாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மூன்று சீன தடுப்பூசிகள்.