திங்கள், 21 செப்டம்பர், 2020

முதல்வர் தன்னையும் தனது அமைச்சர்களையும் பாதுகாத்து கொள்ளவே விவசாய சட்டங்களுக்கு ஆதரவு! - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

Image

தன்னையும் தனது அமைச்சர்களையும் பாதுகாத்து கொள்ளவே விவசாய சட்டங்களுக்கு ஆதரவு அளித்ததாக முதலமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய மசோதாக்களுக்கு ஆதரவளித்து  ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும் என குறிப்பிட்டுள்ளார். யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு, “விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று உணர்ந்து சட்டங்களை ஆதரித்ததாக கூறியிருப்பது, அர்த்தமற்ற செய்கையின்  உச்சக்கட்டம் என்றும் விவசாய மசோதாக்கள் குறித்து முதலமைச்சர் ஆற, அமர உட்கார்ந்து பொறுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து - உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடை பெற்றவர், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடத் தீவிரம் காட்டுபவர் என முதலமைச்சர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளளை தெரிவித்துள்ள ஸ்டாலின் 

விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும் சாமரம் வீசுவதையும், தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும வரலாறு மன்னிக்காது என எச்சரித்துள்ளார். முதலமைச்சரின் கபட நாடகம்”,  இன்னும் ஆறு மாதங்களுக்கு வேண்டுமென்றால் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவலாம் என்றும் அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப் போகும் தண்டனையிலிருந்து  நிச்சயம் தப்பிக்க முடியாது என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.