வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் டிராக்டரை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்த்து பலரும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து வேளாண் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது.
இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டிராக்டரை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் காங்கிரஸின் இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். சுமார் 15-20 பேர் இதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.