வியாழன், 17 செப்டம்பர், 2020

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா தாக்கல்!

 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 13 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 465-க்கும் மேல் பொறியியல் கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதன்படி தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் எனவும், புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்ற கல்லூரிகளை கண்காணித்தல் மற்றும்  நிர்வகிக்கும் பணிகளில் ஏற்படும் தொய்வினை தவிர்க்கவும் கற்றல் தரத்தை உயர்த்தும் வகையில் ஆராய்ச்சியில் கவனம் செலுத்திடவும் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Image 

இருப்பினும், அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அண்ணா தொழில்நுட்ப  பல்கலைக்கழகம், 
திருச்சி ,மதுரை, நெல்லை கோவை என 6 பல்கலைக்கழகமாக பிரிக்கப்பட்டது. 

கலந்தாய்விற்காக மாணவர்கள் சென்னை வருவதை தவிர்க்கவும், நிர்வாக காரணங்களுக்காகவும் 6ஆக அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தை 6 பிரித்த நடவடிக்கை தேவையற்றது என்று கருதியதுடன் 2012ம் ஆண்டு 6 பல்கலைக்கழக வளாகங்கள் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா சீர்மிகு பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டாக பிரிக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் சீர்மிகு பல்கலைக்கழகம் வழங்கப்பட்டால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்கிற காரணத்தால் சிறப்பு அந்தஸ்து வழங்குவதை தமிழக அரசு ஏற்கவில்லை. தற்போது மீண்டும் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. தற்போதுள் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும் புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று ஏற்கனவே உள்ள பெயர் வழங்கப்பட இருக்கின்றது.