Featured on TIME’s list, Bilkis says would have been happier if demand was met : குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷாஹீன்பாகில் பெண்களை இணைத்து போராட்டம் நடத்திய பில்கிஸ், டைம் பத்திரிக்கையின், உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் இடம் பெற்றார். இந்த பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் எங்களின் வேண்டுகோள்கள் நிறைவேறியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
82 வயதான பில்கிஸ் தன்னுடைய நண்பர்கள் அஸ்மா கத்தூன் (90), சர்வாரி (75) ஆகியோருடன் இணைந்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஷாஹீன்பாக்கில் போராட்டம் நடத்தினார்கள். கடந்த நூறாண்டுகளில் கடும் குளிரான காலமாக இருந்தது கடந்த டிசம்பர். இருப்பினும் இந்த மூன்று நபர்களும் போராட்ட களத்திற்கு சென்றனர். அதனால் அவர்கள் ஷாஹீன்பாக் பாட்டிகள் என்று அழைக்கப்பட்டனர்.
”இந்த பட்டியலில் இணைந்திருப்பதாய் நாங்கள் அம்மாவிடம் கூறிய போது, அவர் ”சரி” என்று மட்டுமே கூறினார்” என பில்கிஸின் மகன் மன்சூர் அகமது அறிவித்துள்ளார். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்கு இதனால் அவர் மகிழ்ச்சி அடையவில்லை என்று கூறுகிறார் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் அகமது.
நான் கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்கின்றேன். ஆனாலும் எங்களின் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அரசாங்கம் எங்களின் கோரிக்கைகளை கேட்டு சி.ஏ.ஏவை ரத்து செய்திருந்தால் நான் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் “கொரோனா ஊரடங்கு காரணமாக, பாதியிலேயே போராட்டத்தை கைவிட வேண்டிய சூழல் வந்தது வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
அகமது இது குறித்து கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் பில்கிஸிற்கு உடல்நிலை சரியில்லை இருப்பினும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார். மற்ற பெண்களுடன் இணைந்து போராட்டம் செய்தார் என்று அவர் கூறினார். மேலும் அவர்களுடைய குடும்பத்தில் இருந்த அணைத்து பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்றும் அறிவித்தார் அகமது.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற போராட்டத்தை ஷாஹீன்பாகில் மக்கள் நடத்தினார்கள். 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம், கொரோனாவாலும் அதன் பின்னால் அறிவிக்கப்பட்ட ஊரடங்காலும் நிறுத்தப்பட்டது. இந்த டைம் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.