அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்களை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற, நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சஜ்ஜன்சிங்ரா சவான் தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்பாட்டின்படி ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளடக்கிய டோக்கன்கள் வருகிற 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வழங்கப்படும். இதனை, ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கேச் சென்று வழங்குவார்கள் என்று குறிப்பிடுகிறார் சவான்.
அதுமட்டுமின்றி, டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தில் மட்டுமே அட்டைதாரர்கள் பொருள்களை வாங்க முடியும். மற்ற நேரத்தில் நிச்சயம் பொருள்கள் வழங்கப்படமாட்டாது. மேலும், இந்தத் தகவலை ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எப்போதும்போல இந்த மாதமும் அந்தியோதயா அன்னயோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை வழங்கப்படும். ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கச் செல்பவர்கள், ஒரு மீட்டர் இடைவெளி விட்டுத்தான் நிற்கவேண்டும். மேலும், ரேஷன் கடைக்கு வரும் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் மாஸ்க் வழங்கி தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பொருள்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார் சவான்.