வாட்ஸ் அப் பற்றி நீண்டகாலமாகப் பரவிக்கொண்டிருக்கும் வதந்தி விரைவில் நிஜமாகப் போகிறது. பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த ஆதரவளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய அப்டேட் இறுதிக் கட்ட சோதனையில் இருக்கிறது என்றும் ஏற்கெனவே இது பீட்டா பதிப்பில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் WABetainfo தெரிவிக்கிறது. இந்த புதிய அப்டேட் அதன் பயனர்களை ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கும்.
தற்போது, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வெப்பை (WhatsApp Web) பயன்படுத்தவேண்டுமென்றால், வாட்ஸ் அப் செயலி இருக்கும் ஸ்மார்ட்போன், இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியம். நிலையான அப்டேட்டுக்குப் பிறகு, இனி ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்அப் பயனர்கள் அதன் பயன்பாட்டை தாராளமாக இயக்க முடியும். வாட்ஸ்அப் வெப்புக்கான (WhatsApp Web) புதிய user interfac-ஐ வாட்ஸ்அப் செயல்படுத்தப்போவதாகக் கூறப்படுகிறது. இது சாதனத்திலிருந்து சாட் (Chat) வரலாற்றை நகர்த்தவும் end-to-end encryption-ஐ ஆதரிக்கும் விதமாகவும் இருக்கும்.
‘புதிய சாதனத்தை இணைக்க’ என்கிற ஆப்ஷன் உள்ள புதிய அம்சத்தின் ஸ்கிரீன் ஷாட்களையும் இந்த வலைத்தளம் பகிர்ந்துள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களும் முதன்மை ஸ்மார்ட்போன் இணைப்பு இல்லாமல் செயல்பட உதவும் toggle ஆப்ஷன் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீட்டா நிலையில் இருப்பதால், ‘சில அம்சங்கள் இன்னும் பெறவில்லை’ என்றும் மேற்கோளிட்டுள்ளனர்.
தனிப்பட்ட நபர்களுக்கு வித்தியாச வால்பேப்பர்களை அமைத்துக்கொள்ளும் மற்றொரு சிறப்பம்சமும் இந்த அப்டேட்டுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம், முதலில் iOS-ல் காணப்பட்டு தற்போது ஆண்ட்ராயிட் OS-ல் பொருத்துவதற்கான வேலைகளில் உள்ளது. இந்த வால்பேப்பர்களை தங்கள் கேலரி அல்லது அதிகாரப்பூர்வ வால்பேப்பர் பயன்பாட்டிலிருந்து பதிவிறக்கம் செய்து அமைத்துக்கொள்ளலாம்.