திங்கள், 21 செப்டம்பர், 2020

எல்லையில் புதிதாக 6 நிலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இந்திய ராணுவம்: சீனாவுக்கு தக்க பதிலடி!

Image

எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துவரும்  நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் எல்லையில் 6 புதிய  நிலைகளை இந்தியா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

 

இந்தியா சீனா எல்லைப் பிராந்தியமான லடாக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சீனா  ராணுவம் ஊடுருவியதை தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக பதற்றமான சூழல்  நிலவி வருகிறது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர இருநாட்டு  ராணுவத் தளபதிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில்  கடந்த ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் இருநாட்டு வீரர்களுக்கும் கால்வான்  பள்ளத்தாக்குப் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள்  உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான  உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.  

 

இதனை தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை காரணமாக சில  பகுதிகளில் இருந்து சீனப்படைகள் பின்வாங்கினாலும் இந்திய எல்லைப்பகுதியான  பாங்காங் ஏரியை சீனப்படைகள் தொடர்ந்து உரிமைகோரி வருகின்றன. இதனால்  பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாங்காங் ஏரி பகுதியிலிருந்து  பின்வாங்க மறுப்பு தெரிவித்துவருவதோடு படைபலத்தையும் சீனா அதிகரித்து  வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் தனது ராணுவ பலத்தை  எல்லையில் அதிகப்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் எல்லையில் சீன ஊடுருவலுக்கு தக்க பதிலடி தரும் வகையில்  இந்திய ராணுவம் புதிதாக 6 நிலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்துள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்கு இடையில் இந்திய இராணுவம் எல்லையின் புதிய மலை அம்சங்களில் மாகர் மலை, குருங் மலை, ரெசென் லா, ரெசாங் லா, மொக்பாரி ஆகிய பகுதிகளில் சீன நிலைகளை விட ஆதிக்கம் செலுத்தும் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

இந்த மலை அம்சங்கள் முதலில் செயலற்ற நிலையில் இருந்தன, இந்திய  ராணுவத்துக்கு முன்பு இந்த பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்திருந்தது.  இதனால் போர் ஏற்பட்டால் சீனா அதிக்கம் செலுத்தும் வகையில் இருந்தது.  ஆனால் தற்போது அந்த மலை உயரங்கள் இந்திய ராணுவம் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளன.

 

இந்த பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமிக்க மேற்கொண்ட முயற்சிகள்  அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளின்  போதுதான் சீனா மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடத்தியது எனவும் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 

 

இந்திய இராணுவத்தால் உயரங்களை ஆக்கிரமித்த பின்னர், சீன இராணுவம்  அதன் ஒருங்கிணைந்த ஆயுதப் படையின் சுமார் 3,000 கூடுதல் துருப்புக்களை  அதன் காலாட்படை மற்றும் கவச துருப்புக்கள் உட்பட ரெசாங் லா மற்றும்  ரெச்சென் லா உயரங்களுக்கு அருகில் நிறுத்தியுள்ளதாகவும் ராணுவ  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.