செல்போனில் பப்ஜி கேம் விளையாடியதையும், ஆன் -லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததையும் பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார். இவரது மனைவி கீதா. ராஜகுமார் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார் இந்த தம்பதிக்கு சஜன் என்ற 14 வயது மகன் இருந்தார். 9-ம் வகுப்பு படிக்கும் சஜன் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தனது தாயார் கீதாவின் செல்போனில் பப்ஜி கேம் விளையாடத் தொடங்கியுள்ளார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேமுக்கு அடிமையாகியுள்ளார் சஜன்.
இதைத் தொடர்ந்து பணம் கட்டி ஆன் - லைன் ரம்மியும் ஆடத் தொடங்கியுள்ளான். கடந்த சில வாரங்களாகவே ஆன் - லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சஜன், தாயாரிடமும் வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளான். அதேநேரத்தில் மகன் நடவடிக்கைகள் குறித்து தாய் கீதா தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால், சஜனை செல்போனில் தொடர்பு கொண்டு ராஜகுமார் கண்டித்தார். மனமுடைந்த சிறுவன் ஆத்திரத்தில் செல்போனை உடைத்துவிட்டு கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறினான்.
ஒருநாள் கழித்து 23ஆம் தேதி சிறுவன் சஜன் மீண்டும் வீடு திரும்பினான். அப்போது, புதிய செல்போன் வாங்கித் தருமாறு கேட்டதற்கு தாய் கீதா மறுத்துள்ளார். இதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறினான். இந்த நிலையில், விஷம் குடித்துவிட்டு அருகில் உள்ள வாழைத் தோப்பில் சஜன் மயக்கமடைந்து கிடப்பதை அங்குள்ள விவசாயிகள் கண்டனர். கீதாவுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து திங்கள் சந்தையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஜன் பரிதாபமாக உயிரிழந்தான்...
சிறுவனின் உயிரிழப்பு குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்க, தாயின் கவனிப்பின்றி செல்போன் கேமுக்கு அடிமையாகி சிறுவன் உயிரை மாய்த்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.