ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

திருச்சி அருகே பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிப்பு; போலீஸ் விசாரணை

 திருச்சி அருகே இனாம்குளத்தூர் கிராமம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது சமூக விரோதிகள் காவி சாயம் ஊற்றி அவமதித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் கிராமம், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது நேற்று (செப்டம்பர் 26) நள்ளிரவில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் காவி சாயம் ஊற்றியும் காலணி வீசியும் அவமதிப்பு செய்துள்ளனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும் இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம பொதுமக்கள் திருச்சி – மதுரை சாலையில் மரியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மரியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மரியலைக் கைவிட்டனர்.

பின்னர், இனாம்குளத்தூர் கிராம பொதுமக்கள் பெரியார் சிலையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்தனர். இதனால், அப்பகுதியில், பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல, கடந்த ஜூலை மாதம் கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அமதிப்பு செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் அரியலூர் அடுத்த தேளூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது தார் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டது. இப்போது திருச்சி அருகே இனாம்குளத்துரில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்பட்டுள்ளது.