திங்கள், 21 செப்டம்பர், 2020

ஃபின்சென் ரகசிய ஆவணங்கள் என்றால் என்ன?

 


RITU SARIN

ஃபின்சென் ரகசிய ஆவணங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிடுகிறது. ஃபின்சென் ரகசிய ஆவணங்கள் என்றால் என்ன?

அமெரிக்க கருவூலத் துறையின் நிதி மோசடி அமலாக்க முகமைக்கு, வங்கிகள் தாக்கல் செய்த 2,100 க்கும் மேற்பட்ட ‘சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டு அறிக்கைகளை  ஃபின்சென் ஆவணங்கள் உள்ளடக்குகிறது. அமெரிக்காவின் அமலாக்க முகமை பணமோசடிக்கு எதிரான போரில் சர்வதேச அளவில் முன்னணி கட்டுப்பாட்டாளராக விளங்குகிறது . 1999 முதல் மற்றும் 2017 வரை வங்கிகளில் செயல்படும் கண்காணிப்பு அதிகாரிகள் குழு, நிதி மோசடி, பயங்கரவாதம், போதைப்பொருள் கையாளுதல் போன்ற குற்றச் செயல்களுக்கு சாட்சியாக அடையாளம் காணப்பட்ட  2 டிரில்லியன் டாலர் உயர் மதிப்பு பணப் பரிவர்த்தனைகளை ஃபின்சென் ரகசிய ஆவணங்கள் அடையாளம் காண்கின்றன.

எனவே, எஸ்ஏஆர் அறிக்கை என்றால் என்ன? அவை எப்போது தாக்கல் செய்யப்பட வேண்டும்?

எஸ்.ஏ.ஆர் என்பது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு (ஃபின்சென் ) தாக்கல் செய்யும் ஒரு அறிக்கையாகும்.  இவை மிகவும் இரகசியமானதாக கருதப்படுகிறது. எனவே, வங்கிகள் அதன் இருத்தலை கூட   உறுதிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. உண்மையில், வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளருக்குக் கூட  இத்தகைய ஆவணம் குறித்த தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஃபின்சென் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்,  இந்த ஆவணம் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும், பணப் பரிவர்த்தனை நிகழ்ந்த 30 நாட்களுக்குள் எச்சரிக்கை அறிகுறிகளை அனுப்ப வேண்டும். சட்டத்திற்கு புறம்பான வழிகளில் ஈட்டிய நிதிகள், கருப்பு பணம்;  சாத்தியமான பணமோசடி; பயங்கரவாத நிதி போன்ற சந்தேகத்தை எழுப்பும் எந்த ஒரு பரிவர்த்தனையும் இதன் கீழ் அடையாளம் காணப்படுகிறது.

இரு தரப்புக்கு இடையே வெளிப்படையான பொருளாதார  இணைப்பு இல்லாத பணப் பரிவர்த்தனைகள் (கணினி பாகங்களுக்கு, பிஸ்ஸேரியா நிறுவனத்துக்கு பணம் செலுத்தும் வைர வியாபாரி); அதிகமான இடர்பாடு-ஆபத்துள்ள அதிகார வரம்புகளில்  நடக்கும்  பரிவர்த்தனைகள் (ஆப் ஷோர் ஹெவன்ஸ் , அபாயம் நிறைந்த பகுதிகள்); அரசியல் செல்வாக்கு நிறைந்தவர்களின் பரிவர்த்தனைகள், ஊடக அறிக்கைகள் குறிப்பிடும் நிறுவனங்கள் தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகளை இந்த ஆவணம் அளிக்கிறது.

இதை யார் தாக்கல் செய்ய வேண்டும்? 

வங்கிகள் இதுபோன்ற அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இப்போது பண பரிமாற்ற சந்தைகள், பத்திர தரகர்கள், கேசினோக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எஸ். ஏ. ஆர் அறிக்கையை  தாக்கல் செய்யாமல் இருந்தால் மிகப்பெரிய அபராதங்கள் விதிக்கக்கூடும். சமீபத்திய ஆண்டுகளில், டாய்ச் வங்கி, எச்எஸ்பிசி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி ஆகியவை முறையற்ற செயல்திறன் காரணமாக பெரும் அபராதத்திற்கு உட்படுத்தப்பட்டன. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் இத்தகைய அறிக்கையை தாக்கல் செய்ய தேவையில்லை. அனைத்து பங்குதாரர்களும் எஸ்ஏஆர் ஆவணத்தை குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது  பத்திரப்படுத்த வேண்டும்.

எஸ்ஏஆர் ஆறிக்கையை ஆதாரமாக பயன்படுத்தமுடியுமா ? இல்லையென்றால், அதன் முக்கியத்துவம் என்ன?

இந்த அறிக்கைகள் குற்றச்சாட்டுகளாக எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. ஒழுங்கற்ற செயல்பாடுகள் மற்றும் குற்ற நடவடிக்கைகள் குறித்தும் சட்ட அமலாக்க முகமைக்கு எச்சரிக்கை அறிகுறிகளை அளிக்கிறது. ஃபின்சென் எஸ்.ஏ.ஆர் அறிக்கைகள் எஃப்பிஐ, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறை  உள்ளிட்ட சட்ட முகமைகளுடன்  பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அவை குற்றங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டாலும், சட்ட வழக்குகளை நிரூபிக்க நேரடி ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தியாவில் எஸ்.ஏ.ஆர் அறிக்கைக்கு நிகர் உள்ளதா ?

ஆம்….. உண்டு.  நிதி புலனாய்வு பிரிவு-இந்தியா (FIU-IND) அமெரிக்காவின் ஃபின்சென் போன்ற செயல்பாடுகளை செய்கிறது. 2004 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, உயர் மதிப்பு பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும், பகுப்பாய்வு செய்வதற்குமான நோடல் ஏஜென்சியாக செயல்படுகிறது.

பண மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் ஒவ்வொரு மாதமும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பண பரிவர்த்தனை (சி.டி.ஆர்) சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள்  (எஸ்.டி.ஆர்) மற்றும் எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்கள் போன்ற அறிக்கைகளைப் பெற ஏஜென்சிக்கு அதிகாரம் உண்டு. இந்தியாவில் உள்ள வங்கிக் கிளைகள், ரூ10 லட்சமும் அதற்கு மேற்பட்ட தொகைக்குமான பணம் போடும் மற்றும் எடுக்கும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும், அதோடு சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளையும் பற்றிய அனைத்து விவரங்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு மாதமிரு முறை அறிக்கைகளாக அளிக்க வேண்டும்

எஸ்.டி.ஆர் மற்றும் சி.டி. ஆர் அறிக்கைகள்  நிதி புலனாய்வு பிரிவால்  பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.   சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் அனைத்தும் அமலாக்க இயக்குனரகம், மத்திய புலனாய்வுப் பிரிவு ,  வருமான வரி போன்ற அரசு முகமைகளுடன் பகிரப்படுகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 14 லட்சம் எஸ்.டி.ஆர் அறிக்கைகள் பதிவு செய்துள்ளதாக நிதி புலனாய்வு பிரிவின் 2017-2018 ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. இது முந்தைய ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட எஸ்.டி.ஆர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

ஃபின்சென் ரகசியங்கள் இந்தியாவில் என்ன வழிவகுக்கும்?

இந்தியாவில் விசாரிக்கப்பட்டு வரும்  நதி மோசடி வழக்குகளை, உலகின் மிக சக்திவாய்ந்த கட்டுப்பாட்டாளர்  கண்காணித்து வருகிறார் என்பது தான்  நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. ஏனெனில், இந்திய நிறுவனங்கள் மற்றும் சக்தி வாய்ந்த தனிநபர்களின் பல சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட முறைகேடுகள் குறித்த முழு விவரமும் ஃபின்சென்  ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . ரவுண்ட்-ட்ரிப்பிங், பணமோசடி அல்லது போலி நிறுவனங்களை கையாளுதல் பற்றிய தெளிவான அறிகுறியைக் கொடுக்கும் வங்கி பரிவர்த்தனைகளின் விவரங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்திய வங்கித் துறையைப் பொறுத்தவரை, பிரதிநிதி வங்கி முறையின்  (correspondent banking) ஆபத்துக்களை ஃபின்சென் ஆவணங்கள் நமக்கு எடுத்துறைக்கின்றன. மேலும், ரகசிய தரவுகளில் 44 இந்திய வங்கிகள் பெயரிடப்பட்டுள்ளன, இதன் தாக்கம் என்ன என்பதை நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டும்.

.இந்த கோப்புகள் ஐ.சி.ஐ.ஜே மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களுக்கு எவ்வாறு வந்தன?

இந்த பதிவுகள் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்கும் காங்கிரஸ் சபையால் சேகரிக்கப்பட்டன. பஸ்ஃபீட் நியூஸ்  இந்த பதிவுகளை  வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பிடம் (ICIJ)  பகிர்ந்து கொண்டது. வங்கிகளின் ரகசியம் மற்றும் பணமோசடி குறித்து விசாரிக்க, ஐ.சி.ஐ.ஜே அமைப்பு செய்தி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தது. கூட்டமைப்பில் தி  இந்தியன் எக்ஸ்பிரஸ்  நாளிதழ்  பங்குதாரராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.