ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

இந்தியாவில் சுமார் 23.49 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு... தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா?

 இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 23.49 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில்  தமிழகம் 4வது இடத்தில் உள்ளதகாவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இந்தியாவில் எச்.ஐ.வி. நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறதா? அதேநேரத்தில் எய்ட்ஸ் பரவுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன? எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எத்தனை மருத்துவமனைகள் உள்ளன. மேலும் இதற்கான புள்ளிவிவரங்கள் இருக்கிறதா என்று மாநிலங்களவையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்கா எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள மத்திய குடும்பம் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, 2019-ஆம் ஆண்டு எச்ஐவி மதிப்பீட்டு அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 23.49 லட்சம் பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக நாட்டில் புதிதாக எச்.ஐ.வி. நோய் தொற்று என்பது குறைந்து வருகிறது என்று கூறியுள்ள அவர், தவறான நடத்தை, பாதுகாப்பற்ற ஓரினச்சேர்க்கை மற்றும் பாதுகாப்பற்ற ஊசி போதை பொருள் மூலமே எச்.ஐ.வி.நோய் அதிகளவு பரவுவதாக கூறினார்.

மேலும் அதில், இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு என்று சிகிச்சை அளிப்பதற்கு பிரத்தியேக மருத்துவமனைகள் இல்லை. எனினும் அரசாங்கத்தின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2019-ம் ஆண்டு நிலவரப்படி 23.49 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 2010ஆம் ஆண்டை விட சற்று குறைவாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர்கள் கொண்ட மாநிலங்கள்

1) மகாராஷ்டிரா - 3.96 லட்சம்


2) ஆந்திரா-3.14 லட்சம்


3) கர்நாடகா- 2.69 லட்சம்


4) தமிழ்நாடு- 1.55  லட்சம்


5) தெலுங்கானா- 1.58 லட்சம்