மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அத்தியவசிய பொருட்கள் சட்டம் மற்றும் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்து உடனடியாக விடுதலை செய்தனர் .
தஞ்சாவூரில், வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த 25 பேர் மீதும், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் கடைவீதியில் விவசாய சட்ட மசோதாக்களை எதிர்த்து விவசாய சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,திமுக மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் சேரந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு விவசாய சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டத்தால் பேருந்துகள் வெளியே செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ய முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.