8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். வேளாண் மசோதாக்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது மத்திய அரசின் அதிகார மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக கூறியிருந்தார். எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக படுகொலை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘விவசாயிகளின் நலனுக்காக போராடிய 8 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்தது துரதிருஷ்டவசமானது. இது அரசின் அதிகார மனநிலையை காட்டுகிறது. மேலும் ஜனநாயக கொள்கைகளை அரசு பின்பற்றவில்லை என்பதும் தெரியவருகிறது. நாங்கள் அடிபணிய மாட்டோம். பாஜக அரசை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், பொது இடங்களிலும் போராடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.