வியாழன், 17 செப்டம்பர், 2020

சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்!

 சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

2020-21 ஆண்டுக்கான கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், கொரோனா நோயாளிகளுக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்காக ரூ.3,359.12 கோடி கூடுதல் தொகை துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. 

 

மேலும், கொரோனா காலத்தில் குடும்ப  அட்டைதாரர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 4,218.20 கோடி , நோய் கண்டறியும் சாதனங்கள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு ரூ.1.109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு ரூ.107.40 கோடி அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினை செயல்படுத்த மாநில அரசின் மானியமாக ரூ.316.80 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கியின் மூலதன கோட்பாட்டை பின்பற்ற ரூ.437 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி, திருப்பூர் மாவட்டங்களில்  கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க ரூ.82.60 கோடியும், 
விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலைக்கான நிலுவைத் தொகை வழங்க ரூ.170.28 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

ஐந்து புதிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூ.646.26 கோடி ஒதுக்கீடு. அதேபோல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் 2-ம் தவணை பொது அடிப்படை மானியத்திற்கு ரூ.987.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.