திங்கள், 21 செப்டம்பர், 2020

அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கன மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை  பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்:

” வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 (20,21/09) மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும் , குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் ( சென்டிமீட்டரஸ்) :

அவலாஞ்சி (நீலகிரி ) 21 , பந்தலூர் (நீலகிரி ) 14, மேல் பவானி (நீலகிரி ) 13 , வால்பாறை (கோவை ) 12, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தேவலா (நீலகிரி ) தலா 11 , சின்கோனா (கோவை ) 10 என்ற அளவில் பதிவாகியது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

கடல் உயர்அலை முன்னறிவிப்பு : தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப். 21 அன்று இரவு 11:30 மணி வரை கடல் உயர்அலை 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

என்று தெரிவிக்கப்பட்டது.