மத்திய அரசின் ஊரடங்கு நடைமுறை அமலில் இருக்கும் நிலையில் 100% ஆசிரியர்கள் நேரடியாக வந்து பணிகளில் ஈடுபடுமாறு நந்தனம் அரசு ஆடவர் கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பொருளாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அந்தவகையில் மத்திய அரசின் Unlock 4 வழிகாட்டு செயல்முறையில் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இயங்கும் பள்ளி, மற்றும் கல்லூரிகள் செயல்பட செப்டம்பர் 30 வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 50% ஆசிரியர்களுடன் பள்ளி, கல்லூரிகள் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நூறு சதவீத ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டும் என சென்னை நந்தனர் அரசு கல்லூரியின் அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து ஆசிரியர்களும், அதாவது 100% பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான காரணத்திற்கு மட்டுமே மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டும் என்றும், அதற்கான சான்றை அறுவை சிகிச்சை நிபுணர்களிடமும் துணை அறுவை சிகிச்சை நிபுணர்களிடமும் மட்டுமே பெற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இம்மாதிரியான அறிவிப்பு, தமிழகத்தில் கல்லூரிகள் செயல்பட தொடங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். உயர்கல்வித்துறை தலையீட்டு நந்தனர் அரசு கல்லூரி முதல்வரின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.