ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு!

Image

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றப் போவதாக பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக 2-ஆக பிரிக்கும் சட்ட மசோதா கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, தற்போதைய அண்ணா பல்கலைக்கழகத்தின்ப்பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றவும், புதிதாக பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

42 வருட கால சிறப்பு மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால், மாணவர்களின் சான்றிதழ்களில் பாதிப்பு ஏற்படும் என்றும், பல்வேறு வெளிநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்விக்குறியாகும் என்றும் பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

தற்போதைய அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து இதே பெயரில் செயல்படவும், புதிய பல்கலைக்கழகத்துக்கு வேறு பெயரை வைக்கவும் பல்கலை., பேராசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற உள்ளதாகவும், தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், அதன் பின்னரும் அரசு, கோரிக்கையை ஏற்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு ( AUTA ) தெரிவித்துள்ளது.