நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி மத்திய அரசு வேளாண் மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்றிய நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் செப்டம்பர் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு, 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச்சட்டம், 2020. 2.விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச்சட்டம், 2020. 3.அத்தியவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், 2020. ஆகிய 3 வேளாண் மசோதாக்களையும் மத்திய அரசு முதலில் மக்களவையில் நிறைவேற்றியது.
இதனிடையே, வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகக் கூறி மத்திய அரசில் அங்கம் வகித்த ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, 3 வேளான் மசோதாக்களும் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பு அமளியைத் தாண்டி இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வேளாண் மசோதாக்கள் குறித்தும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.