மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவை துணைத்தலைவரின் இருக்கைக்கு அருகே சென்ற உறுப்பினர்கள் விதிப்புத்தகத்தை கிழித்து எறிந்தனர். அப்போது மைக்கும் உடைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அவை கூடியது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேர் நடப்பு கூட்டத்தொடரின் எஞ்சிய அலுவல்களில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் உடனடியாக அவையிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். ஆனால், அவையில் இருந்து வெளியேற மறுத்த உறுப்பினர்கள், தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் வெளியேற மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.