
30 ஆண்டுகளாக பாடுபட்டு 3 கி.மீ தூரத்திற்கு பாசன கால்வாய் கட்டிய முதியவருக்கு, மஹிந்திரா நிறுவனம் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் அடர்ந்த காடு மற்றும் மலைகள் சூழ்ந்த கோதில்வா கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழிலாக இருந்தாலும், கால்வாய் வசதி இல்லாததால், மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் வீணாக ஆறுகளுக்கு சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்து கவலையடைந்த லாங்கி பூயான் என்பவர் 30 ஆண்டுகளாக பாடுபட்டு 3 கி.மீ. தொலைவிற்கு பாசன கால்வாய் கட்டியுள்ளார். காய்ந்து கிடந்த வயல்களுக்கு நீர் கிடைக்க வழிவகை செய்த முதியவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. முதியவரின் செயல் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு சென்றதாகவும், அதனால் உடனடியாக அவருக்கு உதவி செய்ய முடிவெடுத்ததாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லாங்கி பூயான் கூறுகையில், ‘எனக்கு டிராக்டர் கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.





