சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இரண்டு விவசாய சட்ட மசோதாக்கள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டன. எதிர்க் கட்சிகளின் பெரும் சலசலப்புக்கு மத்தியில் – வேளாண் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா; விவசாயிகள் (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த ஒப்புதல் ஆகிய இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே மக்களவையால் அனுமதிக்கப்பட்ட இரண்டு கட்டளைகளை மாற்ற முற்படும் மசோதாக்கள் மேல் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாவை தாக்கல் செய்யப்படும் போது மாநிலங்களவை அசாதாரண சூழல் நிலவியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் மேசையிலிருந்து காகிதங்களை கிழித்து எறிந்து கோஷமிட்டனர். அவை துணைத்தலைவரின் மைக்கும் உடைக்கப்பட்டது.
மசோதாக்களைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், மதியம் 1 மணிக்கு பிறகும் விவாசாய சட்ட மசோதாக்கள் நிறைவேறும் வரை சபை தொடர்ந்து செயல்படும் என்று துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்ததை அடுத்து, சபையில் கூச்சல் குழப்பம் வெடித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை திட்டமிட்டபடி ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினர்.
எவ்வாறாயினும், துணைத் தலைவர் சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு தொடர்ந்து பதிலளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த நேரத்தில், சபையில் ஒருமித்த கருத்தை ஏற்படாத போது அவையின் செயல்பாடுகளை நீட்டிக்கும் துணைத் தலைவரின் முடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.
சபை நீட்டிப்பு என்பது ஆளும் கட்சியின் பெரும்பான்மை அடிப்படையில் இல்லாமல் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். மேலும், அவையின் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டு, சட்ட மசோதாக்கள் நாளை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சபை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை துணை சபாநாயகர் ஏற்காதபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையின் மையப்பகுதியில் கூடினர். மேசையிலிருந்து ஆவணங்களை பறித்து கிழித்து எறிந்தனர். இதன் காரணமாக, சபை சரியாக செயல்பட முடியாமல் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மதியம் 1:40 மணிக்கு சபை தொடங்கிய போது, விவசாய சட்ட மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தீர்மானங்களை வாசித்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் தீர்மானங்கள் சபையால் மறுக்கப்பட்டது .
இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் சபையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர்.
சலசலப்புக்கு மத்தியில், வேளாண் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ஆதரித்திருப்பதுதான் முதல்வரால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது! பதவியைக் காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமே அவருக்கிருக்கும் ஒரே வழி என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.
#AntiFarmerBills-ஐ ஆதரித்திருப்பதுதான் @CMOTamilNadu-வினால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது!
பதவியைக் காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமே அவருக்கிருக்கும் ஒரே வழி! pic.twitter.com/kByJ2jqzS8
— M.K.Stalin (@mkstalin) September 20, 2020
முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி.தேவகவுடா மாநிலங்களவையில் பேசுகையில், “ஒரு விவசாயி என்ற முறையில் விவசாயம் மசொதாக்கள் தொடர்பான பிரச்சினைகளில் அக்கறை கொண்டுள்ளேன். நாம் அனைவரும் விவசாயிகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளோம். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். பிரதமர் வேண்டும் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் விவாசாய மசோதாக்கள் மீதான அவசரத்தை பிரதமர் விளக்க வேண்டும். இந்த சட்டங்களின் நீண்ட கால செயல்பாடுகள் குறித்தும், விவசாயிகளின் வருமானத்தை 2022 – க்குள் இரட்டிப்பாக்குவதற்கான அரசின் நெடுநோக்கை அடைவதற்கு இது எவ்வாறு உதவும் என்பதையும் அவர் விளக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.
மாநிலங்களவையில் விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் , விவசாய சட்ட மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக தெரிவித்தார்.