வியாழன், 24 செப்டம்பர், 2020

இந்தி தெரியாதவருக்கு கடன் வழங்கவில்லையா? அதிகாரி இடமாற்றம்

 ஹிந்தி மொழி தெரியாத காரணத்திற்காக ஓய்வுபெற்ற மூத்த மருத்துவப் பணியாளரின் விண்ணப்பத்தை மறுத்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, ஜெயம்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் கடந்த திங்களன்று திருச்சியில் உள்ள அதன் பிராந்திய (Regional) அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலாளர் விஷால் காம்ப்ளேவின் இந்தச் செயலை கண்டித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்வினைகள் கிளம்பியுள்ளது. ஆனால், வாடிக்கையாளரின் அதிகப்படியான வயதுக் காரணமாகத்தான் கொடுக்கப்பட்ட கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தற்போது கூறுகின்றனர்.

மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை இன்னும் இந்தியாவில் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் மொழியை மையமாகக் கொண்ட பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், ஹிந்தி தெரியாத காரணத்திற்காக வங்கிக் கடன் மறுக்கப்பட்ட விவகாரம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 76 வயதான டாக்டர் C.பாலசுப்பிரமணியன், ஜெயம்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஓர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டுவதற்காகக் கடன் கோரி சில நாள்களுக்கு முன்பு மேலாளர் காம்ப்ளேவைச் சந்தித்துள்ளார். வங்கிக் கடனுக்குத் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறார்.

குறிப்பிடப்பட்ட வங்கியின் நீண்டகால வாடிக்கையாளரான டாக்டர்.பாலசுப்பிரமணியன், வங்கிக் கடனுக்காக சில சொத்து ஆவணங்களைக் கொடுத்துள்ளார். இருப்பினும், மருத்துவருக்கு ‘ஹிந்தி மொழி தெரியுமா’ எனக் கேட்டதாகவும் மொழி பிரச்சினையை மேற்கோள் காட்டி மேலாளர் அவருடைய விண்ணப்பத்தை மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, டாக்டர் பாலசுப்பிரமணியன் தனக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என்று மேலாரிடம் கூறியதாகவும் அதற்கு காம்ப்ளே, தான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால், மொழிப் பிரச்சினை காரணமாகத் தமிழில் உள்ள இந்த ஆவணங்களைப் படிக்க முடியவில்லை என்று கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன், கடன் விண்ணப்பத்தைச் செயலாக்கும்போது மொழியை ஒரு பிரச்சனையாகக் குறிப்பிடுவதற்கு வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கோரினார்.

“கடன் வழங்குவது வங்கியின் தனிச்சிறப்பு. ஆனால், எனக்கு ஹிந்தி தெரியுமா இல்லையா என்ற கேள்வி கடன் விண்ணப்பத்தைச் செயலாக்குவதற்குப் பொருத்தமற்றது. இருப்பினும், மேலாளர் தொடர்ச்சியாகத் தான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த ஆவணத்தைப் பார்க்க முடியாது, ஹிந்தி மொழியில் மட்டும்தான் படிக்க முடியும் என்று அவர் கூறியது மிகவும் வேதனை அளிக்கிறது” என்று டாக்டர் பாலசுப்பிரமணியன் பகிர்ந்தார்.

ஊடகங்களுக்குப் பேச தனக்கு எந்தவித அதிகாரமும் இல்லை எனக்கூறி இந்தப் பிரச்சனை பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்க காம்ப்ளே மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி ஐஓபி வங்கி மூத்த பிராந்திய மேலாளர் S.பிரேம் குமார், இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாகவும் மேலாளர் காம்ப்ளே பற்றி அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். 70 வயதிற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்க வங்கியின் விதிமுறைகளில் இல்லாத காரணத்தால் மட்டுமே மேலாளர் கடன் வழங்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 1,400 நபர்களுக்கு காம்ப்ளே கடன் வழங்கியுள்ளார் என்பதையும் பதிவு செய்தார் பிரேம் குமார்.