புதன், 30 செப்டம்பர், 2020

”போரும் இல்லை, அமைதியும் இல்லை”- இந்திய விமானப்படை தளபதி பதாரியா!

 

Image

எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். 

கல்வான் மோதலையடுத்து இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. சீன ராணுவத்தினர் அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகின்றனர். இதனால் இந்திய ராணுவத்தினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இந்திய- சீன எல்லை நிலைமை குறித்து இந்தியா விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பேசியுள்ளார். ‘போரும் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற நிலையே நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடன் ஏற்படும் மோதலில் வெற்றி பெறுவதில், விமானப் படை முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.