புதன், 16 செப்டம்பர், 2020

​அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் முக்கொம்பில் புதிய அணையின் கட்டுமானம் தொடங்கும் - ஆட்சியர்

 திருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்காக தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கை விரைவில் அரசிற்கு அனுப்பப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். 


காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்சி முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த மாதம் 22-ஆம் தேதி உடைந்தது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்த பிறகு பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில் 32 நாட்களுக்குப் பின் முக்கொம்பு சுற்றுலாத் தலம் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி, முதல்வர் அறிவித்தபடி 410 கோடி ரூபாயில் புதிதாக இரண்டு அணைகள் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

திட்ட அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார்.