source ns7.tv
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக அசாம் மட்டுமின்றி, வடகிழக்கு மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச் சட்டம் 1955ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.அதன் தொடர்ச்சியாக கூட்டுக்குழு அறிவுறுத்திய திருத்தங்களுடன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அசாமில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த மசோதா இன ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தும் என காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், குடியுரிமை திருத்த மசோதாவில், 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது ஏன் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ரே (Saugata Ray) கேள்வி எழுப்பினார்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி, மேகாலயா தேசிய மக்கள் கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. வெளிநாட்டில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்தவர்களுக்கு எளிதாக குடியுரிமை வழங்கினால், வடகிழக்கு மாநில மண்ணின் மைந்தர்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.