புதன், 9 ஜனவரி, 2019

மாநிலங்களவையில் நிறைவேறுமா பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா? January 09, 2019

Image

பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசு நேற்று வெற்றிகரமாக நிறைவேற்றிய நிலையில், மாநிலங்களவையில் அதை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதியினர் வாக்குகளை பெற வேண்டும் என்ற கோணத்தில் இந்த மசோதாவை பாரதிய ஜனதா அரசு அறிமுகப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் உயர் சாதியினர் வாக்குகளை இழந்து விடக் கூடாது என்பதற்காக 10 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. எனினும், தமிழக கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட சில மாநில கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, நேற்றோடு முடிவடைய வேண்டிய மாநிலங்களவை கூட்டம் இன்று ஒருநாள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 
ஆனால், எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக மாநிலங்களவை கூட்டத் தொடரை நீட்டிப்பு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்று விட்டாலும், நீதிமன்றத்தில் இந்த சட்டம் நிற்குமா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

source ns7.tv