source ns7.tv
பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதை கண்டித்து 1998ம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது அரசுப் பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உட்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது ஆகிய பிரிவுகளில் 108 பேரில் 16 பேரின் மீது சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதன்மீது தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத் தொகையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
போராட்டம் நடைபெற்ற காலக்கட்டத்தில் பாஜக உறுப்பினராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி, இவ்வழக்கில் 72வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில் மேல்முறையீடு செய்யப் போவதாக சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மட்டும் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும், போராட்டம் நடைபெற்ற இடத்தில் தான் இல்லை எனவும் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.