source: ns7.tv
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவு எதிரொலியால், துணிப்பை உற்பத்தி புத்துயிர் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனால், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், காய்கறி கடைகள் என அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களிலும் நெகிழிப் பை வழங்குவதை நிறுத்தியுள்ளனர்.
நெகிழ்ப்பைக்கு மாற்றான துணிப்பைகளுக்கு வரவேற்பு பெருகியுள்ளது. துணிப்பைகளுக்கான பயன்பாட்டிற்கு பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் மாறி வரும் நிலையில், அதற்கான தட்டுப்பாட்டை போக்க திருப்பூரில் துணிப்பைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த காலங்களில் பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப் பைகள் வருகையால் துணிப்பைகள் பயன்பாடு குறைந்து அவற்றை பயன்படுத்துவதையே மக்கள் மறந்திருந்தனர். தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையால், துணிப்பைகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாக பின்னலாடை நிறுவனங்கள் கூறுகின்றன.
பிளாஸ்டிக் போன்று தீங்கு இழைக்காத துணிப்பைகள், தரமானதாக இருப்பதால் ஒரு முறை வாங்கி மீண்டும் மீண்டும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதன் சிறப்புகளை பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சந்தைகளுக்கு கொண்டுசெல்லும்போது, அதிக அளவிலான எடைகளை சுமந்து செல்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.