source: ns7.tv
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழக அரசு இன்று முதல் தடை விதித்துள்ள நிலையில், உலகளாவிய பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்.
1950ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் சுமார் 830 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மனித குலத்தின் மொத்த எடைக்கு நிகரான எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளன. எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர, இதுவரை உற்பத்தியான பிளாஸ்டிக்குகள் ஏதோ ஒரு வடிவத்தில் இன்னமும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது அவ்வாறு, இன்றவும் 91 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாத நிலையிலேயே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறுசுழற்சி செய்யப்படாத, மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பூமிக்கு அடியில் அப்படியே தேங்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
50 கோடி பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகின்றன எனவும், உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20 லட்சம் பிளாஸ்டிக் பைகள் விநியோகிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் மக்களால் வாங்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் வீசப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பால்வெளி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரத்தை விட, அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக் துண்டுகள் கடலுக்குள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.