செவ்வாய், 1 ஜனவரி, 2019

கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்துகள்: சென்னையில் 7 பேர் பலி January 01, 2019


சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாகனத்தில் அதிவேகமாக சென்று விபத்து ஏற்பட்டதில், 7 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடுவதாக எண்ணி, ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில்  கண் மூடித்தனமாக விரைந்து சென்றனர். இதைத் தடுக்கும் வகையில், சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அத்துடன், 38 இடங்களில் விபத்து ஏற்படும் பகுதி என கண்டறியப்பட்டு அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது. இருந்த போதும், உற்சாக மிகுதியில் ஏராளமானோர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதால், சிலர் சறுக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். இதனால் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரவிலேயே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
source: ns7.tv

Related Posts: