source ns7.tv
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், ஊழலும், அநீதியும் ஏற்படும் என, அதிமுக மூத்த எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனை தெரிவித்த அவர், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது, சமூக நீதிக்கு எதிரானது எனவும் குறை கூறினார். மாதம் 70,000 ரூபாய் சம்பாதிக்கும் உயர்சாதி வகுப்பினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களா? என்றும் மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
சமுதாய சீர்திருத்தம், சமூக நீதிக்காக போராடியது தமிழக கட்சிகள் மட்டுமே என குறிப்பிட்ட தம்பிதுரை, வடமாநில தலைவர்கள் இன்னமும் தங்களது பெயர்களுக்கு பின்னால், சாதியின் பெயரை குறிப்பிட்டு வருவதாகவும் விமர்சித்தார். பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பது, ஓட்டுவங்கிக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாகவும் தம்பிதுரை சாடினார்.
வர்ணாசிரம தர்மப்படி, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வகுத்துள்ளனர். வேதம் ஓதுபவர்கள் பிராமணர்கள். நாட்டை ஆள்பவர்கள் சத்திரியர். வியாபாரம் செய்பவர்கள் வைசியர். மற்ற தொழில் செய்யும் அனைவரும் சூத்திரர்கள். அப்படி என்றால் நாம் அனைவருமே சூத்திரர்கள்தான்
தமிழகத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டதால்தான், ஜாதி பெயரை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதில்லை. நான் தம்பிதுரை என்றுதான் பெயரை சொல்கிறேனே தவிர, தம்பிதுரை கவுண்டர் என சொல்வதில்லை. பிற மாநிலங்களில் பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட ஜாதி பெயரை பின்னால் போட்டுக் கொள்கிறார்கள். பிரதமர் மோடி பெயர் கூட நரேந்திரா என்பதுதான். மோடி என்பது ஜாதிப் பெயர் தான். ஆனால் நாம் தான் இதில் முன்னோடி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.