சென்னை உட்பட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகப்படியான மழை பொழிவு இல்லாத போதும் சென்னையிலும் நீர்மட்டம் உயர்ந்து எப்படி என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோடையின் உக்கிரத்தில் சிக்கித் தவித்த தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழை தொடங்கிய அக்டோபர் 16ம் தேதி முதல், சில நாட்கள் மட்டுமே நல்ல மழை பெய்தது. இருப்பினும், அடுத்தடுத்த நாட்களில் மழை பொழிவு இல்லை. இருப்பினும் துவக்கத்தில் பெய்த சராசரி மழையால், சில மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
குறிப்பாக, திருவண்ணாமலை, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 2 மீட்டர் அளவிற்கு கணிசமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதே போல், ராமநாதபுரம், கோவை, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 0.50 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி, மாதவரம் பகுதிகளில் 3 முதல் 2 மீட்டர் வரையும், ராயபுரம், அண்ணா நகர், கோடம்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் 1 முதல் 2 மீட்டர் வரையும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கூட கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்த சென்னையில், போதிய மழை பொழியாத போதிலும், நிலத்தடி நீர்மட்டம் எப்படி உயர்ந்தது என்பதே இங்கு அவசியம் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் மழை நீர் கட்டமைப்புகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாலேயே தற்போது சென்னையில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தற்போது கைகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக சென்னை மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்து வரும் நிலையில் தற்போதைய நிலத்தடி நீர் உயர்வு தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிக்க வழிவகுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மழை தீவிரமாக வலுவடையும் பட்சத்தில், அடுத்த ஆண்டு சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சமின்றி நிம்மதியாக இருக்கலாம். இதற்கு, பொதுமக்கள் மேலும், மழைநீர் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதானமாக உள்ளது.
credit ns7.tv