சனி, 2 நவம்பர், 2019

இன்று முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை தொடங்கியது சீனா!

credit ns7.tv

உலகின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு சந்தையான சீனாவில், இன்று முதல் 5ஜி தொழில்நுட்பத்தில் தொலைத்தொடர்பு சேவை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது.
சீன அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான China Mobile, China Telecom, மற்றும் China Unicom ஆகியவை 5ஜி கட்டண அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. 128 yuan ($18) என்ற அளவில் மாதாந்திர 5ஜி சேவை வழங்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாகன் மாதத்திற்கு 598 yuan ($85) கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர் 300GB டேட்டாவை (1Gbps டவுன்லோட் வேகத்தில்) பெறுவர். குறைந்த கட்டணம் செலுத்துவோருக்கு 300Mbps வேகமே கிடைக்கும்.
முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள 5ஜி சேவையானது பீஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகள் அனைத்தும் 5ஜி சேவை வழங்கும் வகையில் 5,000 தரைக்கட்டுப்பாட்டு மையங்களை China Mobile நிறுவனம் மட்டுமே அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஊரக பகுதிகளில் 5ஜி சேவை கிடைக்க மேலும் சிலகாலம் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை வழங்கப்படும் முன்னரே சுமார் ஒரு கோடி பேர் இதற்காக முன்பதிவு செய்துவிட்டதாக தகவல் வெளியானது. 2020ம் ஆண்டிலேயே 5ஜி சேவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்னதாகவே அந்த இலக்கை சீனா அடைந்துள்ளது.
Huawei, Xiaomi போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஏற்கெனவே 5ஜி தரத்திலான மொபைல்களை தயாரிக்கத்தொடங்கிவிட்டன. சீனாவில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி 5ஜி சேவைக்கு இணக்கமான 2.19 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளது, எனினும் ஒட்டுமொத்தமாக 30.8 மில்லியன் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது வெறும் 0.7% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த ஆண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா நாடுகளும் 5ஜி சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் 4G LTE தொழில்நுட்பத்தினைவிட 10 முதல் 100 மடங்கு 5ஜியின் பதிவிறக்க வேகம் அதிகம் என்று கூறப்படுகிறது.