வெள்ளி, 6 டிசம்பர், 2019

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு!

credit ns7.tv
Image
சிலைக்கடத்தல் வழக்குகளின் முக்கிய ஆவணங்களை ஒப்படைக்க மறுத்ததால், முன்னாள் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பதவி நீட்டிப்பு கடந்த நவம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்க இயலாது என்று பதிலளித்தார். 
இதனால், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. எனினும் இதுவரை எந்த ஆவணத்தையும் பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
இந்நிலையில், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதி அசோக் பூஷண் அமர்வில் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கானது திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.