மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தநிலையில் மக்களவையில் நிறைவேறிய மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களில், இஸ்லாமியர் நீங்கலாக அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதே அசாம் போராட்டத்திற்கும் காரணம். ஏற்கெனவே குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாமில் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் மசோதா நிறைவேறியதால் இந்த போராட்டங்கள் இன்னும் தீவிரமடைந்துள்ளன.
போராட்டத்தை, வடகிழக்கு மாநில மாணவர் சங்கமும், அனைத்து அசாம் மாணவர் அமைப்பும் தலைமை ஏற்று வழிநடத்துகின்றன. போராட்டத்திற்கு ஆதரவளித்து கவுஹாத்தி, கோலாகட், திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கவுஹாத்தியில் உள்ள G.S. சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் கலைக்க முயன்றதால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. குடியுரிமை சட்டத்திருத்தத்தால் தங்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவிக்கும் மாணவர்கள், இந்த மசோதா திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தின் காரணமாக அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிசோடி காணப்படுகிறது. பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதேபோல், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அருணாச்சலப் பிரதேசத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன. நஹார்லகுன் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, சோதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
credit ns7.tv