உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையில் இடஒதுக்கீட்டை மேற்கொள்ளாத மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக உட்பட 5 கட்சிகள் மற்றும் வாக்காளர் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்கையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழகத்தில், ஒன்பது புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்றவைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று திமுக குற்றம்சாட்டியது.
எனவே அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தல் சட்ட விதிகளின்படி அனைத்து பணிகளையும் முடித்த பின்னர் புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என திமுக தரப்பில் புதிய ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என மொத்தம் 5 கட்சிகளும், 6 மாவட்ட வாக்காளர் தரப்பிலும் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாகவும், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை எந்த வகையிலும் மீறவில்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
credit ns7.tv