வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு செய்யப்படாததால், உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை நாட இருப்பதாக திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழக மாநில தேர்தல் ஆணையம், தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அதிமுக அரசிடம் சரணாகதி செய்து விட்டதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சட்டத்திற்கு புறம்பாக, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமான நடவடிக்கைக்கு கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைக்க திமுக தயாராக உள்ளது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாக செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என மு.க.ஸ்டாலின் கூறியதை இந்த கூட்டம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
credit ns7.tv