செவ்வாய், 3 டிசம்பர், 2019

பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்திற்கு தடை போட்டார் தாக்ரே !

credit ns7.tv
Image
புல்லட் ரயில் திட்டம் தற்காலிமாக நிறுத்தி வைத்து மறு ஆய்வு செய்ய உள்ளதாக மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்தார். 
வர்த்தக நகரான மும்பை- அகமதாபாத் இடையே, பயண நேரத்தை குறைக்கும் வகையில், புல்லட் ரயில் திட்டத்தை குஜராத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் கனவு திட்டமான, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை, ஜப்பான் மற்றும் பன்னாட்டு நிதி முகமை உதவியுடன் 1.1 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு தடை விதித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே.. சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, மும்பை- அகமதாபாத் இடையே சிறப்பு ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இத்திட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும், திட்ட மதிப்பீடு, அதில் உள்ள நெருக்கடிகள், காலக்கெடு ஆகிய அனைத்து அம்சங்களையும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். 
மெட்ரோ ரயில், புல்லட் ரயில் போன்ற வளர்ச்சி திட்டங்களை தாண்டி, தன்னுடைய அரசு வேளாண் மேம்பாடு, விவசாயிகளுக்கு இழப்பீடு, மக்களுக்கான சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்த இருப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோது செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக, மத்திய அரசிடம் பேசி நிதிகளை பெற்று தரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தாக்கரே குறிப்பிட்டுள்ளார். புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக, விவசாய மற்றும் தன்னார்வ அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், புல்லட் ரயில் திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தாக்கரே. ஆரே காலனி பகுதீய்ல் மரங்களை வெட்டக்கூடாது என பாஜக கூட்டணியில் இருக்கும் போதே எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, புல்லட் ரயில் பணிகளை நிறுத்தி வைப்பதன் மூலம், மோடியின் கனவு திட்டத்திற்கும் தடை போட்டுள்ளார்.