செவ்வாய், 3 டிசம்பர், 2019

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த தெலங்கானா பயங்கரம்!


Image
தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. 
மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி எம்பி ஜெயாபச்சன், நிர்பயா தொடங்கி எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். எனினும், பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர் கதையாகி வருகிறது என்றும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் என்ன பதிலளிக்க போகின்றன என்றும் கேள்வி எழுப்பினார். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள ஜெயாபச்சன், இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை பொது இடத்திற்கு கொண்டு வந்து அடித்தே கொல்ல வேண்டும் என ஆவேசமாக கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த், தெலங்கானா பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தூக்கில் போட வேண்டும் என  வலியுறுத்தினார். ஒரு பெண் நள்ளிரவில் எந்தப் பயமுமின்றி வெளியே சென்று திரும்புவதுதான் உண்மையில் சுதந்திரம் என மகாத்மா காந்தி தெரிவித்துள்ளதை சுட்டி காட்டிய அவர், இந்த நாடு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பானதாக இல்லை என குறிப்பிட்டார். இந்த வழக்கு நீடித்தால், நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என குறிப்பிட்ட விஜிலா சத்யானந்த், ஆபாச இணையதளங்கள், போதைப் பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, இந்த நாட்டில் பெண்கள், கடவுளாக வணங்கப்படுகிறார்கள் என்றும், தாயே தெய்வம் என்றும் குறிப்பிட்டார். ஆனால், பெண்களுக்கு எதிராக நாள்தோறும் குற்றங்கள் நடப்பதாகவும் வேதனை தெரிவித்தார். சரியான நேரத்தில் தங்களுடைய குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பவில்லை என்றால் பெற்றோர்கள் பதறுகின்றனர் என்றும், நாட்டில் உள்ள அனைத்து பெற்றோர்களும் அச்சத்திலேயே உள்ளனர் என்றும் வைகோ தெரிவித்தார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரெங்கராஜன் பேசும் போது சட்டங்கள் இங்கு இருக்கின்றன என்றும், ஆனால் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஊடகங்கள் இது தொடர்பாக நிறைய விவாதித்து, நல்ல கட்டுரைகளைக் கொடுப்பதாக தெரிவித்த அவர், இது தொடர்ந்தால் நல்லதுதான் என்றும் தெரிவித்தார்.
credit ns7.tv