வெள்ளி, 13 டிசம்பர், 2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநில முதல்வர்கள் போர்க்கொடி!

credit ns7..tv
Image
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமின்றி, பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளா, மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளன.
பாஜக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு கொண்டு வந்த, குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. 
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அங்கு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களிலும் மக்கள் போராடி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதே அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்களின் கருத்தாக உள்ளது.
ஆனால், அரசியல் சாசனத்தின் 14 மற்றும் 15வது சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாகும். முஸ்லிம்களை விடுத்து, இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமையை வழங்க முற்படுவது ஏன் என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான, மதச்சார்பின்மை, சம உரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம், மத்திய அரசு தகர்த்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 
நாடாளுமன்றத்தில் தனக்குள்ள ஆதரவை பயன்படுத்தி மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் அமைப்புக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களை புறக்கணிக்கும் வகையிலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒருபோதும் கேரளாவில் அனுமதிக்க மாட்டோம் என கேரள முதல்வர் பிரனராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதேபோன்று, இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம், அரசியலமைப்பின் மீதான நேரடி தாக்குதல் என விமர்சித்துள்ளார். மேலும் இந்த சட்டத் திருத்தம் பஞ்சாபில் அமல்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். சகிப்புத்தன்மையுடனும், மதச்சார்பின்மையுடனும் ஒற்றுமையாக வாழ நினைப்பவர்கள் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் எனவும் அவர் குரலெழுப்பியுள்ளார். மேலும், குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது தவறான தகவல்களை அமித்ஷா தெரிவித்துள்ளார் என்றும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் இந்த மசோதாவை எதிர்த்து சட்ட ரீதியாக போராட வேண்டும் என்றும் அப்துர் ரகுமான் தெரிவித்துள்ளார். 
சிறுபான்மையினர் உரிமையை பறிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 17ம் தேதி மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.