புதன், 6 மே, 2020

அறநிலையத்துறை ஒதுக்கிய ரூ 10 கோடி கொரோனா நிதி: வாபஸ் பெற்று புதிய ஆணை

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக இந்து அறநிலையத்துறை ஒதுக்கிய 10 கோடிக்கான அரசாணையை, அரசு வாபஸ் பெற்று புதிய ஆணையை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதி மற்றும் PM Cares என்ற பெயரில் மக்கள் தாராளமாக நிவாரண நிதியை வழங்கலாம் என்று மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர், இந்த திட்டத்தின் கீழ் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகளை வழங்கும் பொருட்டு, தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, 47 முன்னணி கோயில்களில் இருந்து ரூ 10 கோடி அளவிலான நிதியை, முதல்வர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் சேர்க்க அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.
தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து, தமிழ் முன்னணி நாளிதழின் பதிப்பாசிரியர் ஆர் ஆர் கோபால்ஜி, மைலாப்பூரை சேர்ந்த கோயில் வழிபாட்டு சங்க தலைவர் டி ஆர் ரமேஷ், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் தினேஷ் உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அதில், தமிழகத் திருக்கோயில்களில் இந்து அறநிலையத்துறை ஊழியர்களைத் தவிர, அர்ச்சகர்கள், வேதபாராயணிகள் உட்பட 10-க்கு மேற்பட்ட வகைப்பிரிவிலான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதாந்திர சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை என்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளன. திருக்கோயில்கள் நிர்வாகத்துக்குள் உள்ள இந்த முக்கியப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு ஏற்படுத்தப்படாத நிலையில், திருக்கோயிலின் உபரி நிதியை முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்குவது என்பது, திருக்கோயிலின் பணியாளர்களின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையை அப்பட்டமாக மீறுவதாகும் என்பதால் 47 திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து ரூ.10 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு, இந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கை சட்டவிரோதம் என அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
உத்தரவு : அப்போது, இந்து அறநிலைத்துறை தரப்பில், அரசாணையை திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக புதிய ஆணை வெளியிடப்படும் என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள். அரசாணையை திரும்ப பெற்றுவிட்டு அதன் விவரங்களை வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.