புதன், 6 மே, 2020

ஒரே வார்டில் 160 பேர் பாதிப்பு: கொரோனா மண்டலமான சென்னை புளியந்தோப்பு

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் 160 பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், 15 ஜோன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 15 ஜோன்களில், ஜோன் 5 ( ராயபுரம்), ஜோன் 6 ( திரு.வி.க. நகர்) பகுதிகளே அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.
திரு.வி.க. நகரில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் 160க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 15 ஜோன்களில், 10 ஜோன்களில் உள்ள கொரோனா பாதிப்பு நபர்களை விட, இந்த புளியந்தோப்பு பகுதியில் உள்ள கொரோனா பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, இந்த பகுதி தான் சென்னையிலேயே அதிகளவு கொரோனா பாதிப்பு பகுதி ஆகும். இதற்கடுத்து ராயபுரம் (ஜோன் 5) உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறியதாவது, சென்னையில், 357 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 50 சதவீதத்தினர் இந்த புளியந்தோப்பு பகுதியில் தான் உள்ளனர். தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். இங்கு மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ளதே, இப்பகுதியில் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் மிகுந்த சவாலாக உள்ளது. இப்பகுதி மக்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்றி அஜாக்கிரதையாக உள்ளதாக அவர் கூறினார்.
இந்த பகுதியில் மக்கள் மிகக்குறைந்த இடத்தில் அதிகளவில் வாழ்வதால் அங்கு தனிமனித இடைவெளி என்பது வெறும் எழுத்தளவிலேயே உள்ளது. அங்கு போதுமான தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க ஏற்ற போதுமான இடம் அங்கு இல்லை.அங்கு மக்கள் போதிய இடைவெளிகளின்றி அதிக நெருக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பின் மற்றவர்களுக்கு எளிதில் பரவிவிடுகிறது.
இப்பகுதி மக்களுக்கு, கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு போதுமான அளவிற்கு ஏற்படுத்தப்படவில்லை என்று இப்பகுதிவாசி ஒருவர் கூறினார்.
credit indianexpress.com