வரும் மே 11ம் தேதி முதல் அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தேநீர் கடைகள், தனியார் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் செயல்பட அனுமதியளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி,
1. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி. பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
2. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி. பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி.
3. வரும் 11ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேநீர் கடைகள் (பார்சல் சேவைக்கு மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி. தேநீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடிக்க வேண்டும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.
4. பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
5. பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி.
6. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
7. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
credit ns7