இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 62,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2109 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தப்பித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மிசோரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த மாநிலங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அந்தந்த மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களால் கொரோனா பரவுவதை தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவின் சில மூலைகளில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்பது ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அசாமில் 63 பேரும், திரிபுராவில் 134 பேரும், மேகாலயாவில் 13 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. அந்தமான், நிக்கோபார் தீவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33 பேரும் குணமடைந்துள்ளனர். இதனை தவிர்த்து மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
credit ns7.tv