கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு நாம் விழித்துக் கொள்வதற்கான அழைப்பு என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் தொற்று வாட்டி வதைத்து வருகிறது. வளர்ந்த நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதனை அடுத்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு தொடங்கி அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டம் ஜெனிவாவில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகளில் பிரதிநிதிகள் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் காணொலிக்காட்சி மூலம் உரையாற்றிய ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டரெஸ், கொரோனா வைரஸ் தொற்று இந்த நுற்றாண்டின் மிகப்பெரிய சவால் எனவும் உலகின் பலவீனத்தை இது வெளி கொண்டுவந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். ஏனெனில் நோயை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்படாமல் அவரவர்களுக்கு ஏற்றார்போல, சொந்த வழியில் செயல்படுவதாக கூறினார்.
மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக நாடுகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என விமர்சித்த அவர், அவ்வாறு பின்பற்றியிருந்தால் கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்காது என தெரிவித்தார். மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையோடு ஒன்றிணைவதற்கு கொடுக்கப்படுள்ள ஒரு அழைப்பு தான் கொரோனா வைரஸ் என தெரிவித்த அவர், அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் கொரோனாவை வெல்ல முடியும் என்று கூறினார். மேலும் வைரஸ் பரவுதலை தடுக்காவிட்டால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது எனவும் தெரிவித்தார்.
ஐ.நாவின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் பேசும்போது, ஒரு சிறந்த வித்தியாசமான உலகை கட்டமைப்பதற்கு ஏற்ற தருணத்தை கொரோனா ஏற்படுத்தி தந்துள்ளதாக கூறினார். மேலும் மீண்டும் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களை செய்யாமல், நிலையான அபிவிருத்தி கொடுக்கும் தொழில்களையே செய்ய நாடுகள் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தூய்மையான ஆற்றல், அனைவரையும் இணைத்துக்கொள்ளுதல், சமதர்மம், வலிமை ஆகியவற்றோடு சேர்த்து ஆரோக்கியமான உலகை கட்டமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் உலக நாடுகள் நினைத்தால் அவ்வாறு செய்ய முடியும் எனக்கூறிய அவர், ஆனால் நாம் செய்வோமா? என கேள்வி எழுப்பினார்.
credit ns7.tv