ஞாயிறு, 17 மே, 2020

மக்களுக்கு நேரடியாக பணம் கொடுங்கள்” - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

Image
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பிரதமர் கூறியபடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே13ம் தேதி முதல் அந்த திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அந்த திட்டத்தை பிரதமர் மோடி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை வீடியோ காலின் மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
‘Nyuntam Aay Yojana’திட்டம்: 
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிராச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சி Nyuntam Aay Yojana என்ற திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டமானது ஆண்டு வருமானம் ரூ.72,000- க்கு கீழே உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் குறிப்பிட்ட உதவித்தொகை செலுத்துவதாகும். 
இதனை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, தற்போது உள்ள மத்திய அரசு இது போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏழை மக்களும், விவசாயிகளும்தான் நாட்டின் எதிர்காலம், ஆனால் அவர்களுக்கு தற்போது பணம் தேவைப்படுவதை உணர்ந்து மத்திய அரசு அவர்களுக்கு நேரடியாக பணம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளார். 
சொந்த ஊர்களுக்கு செல்லும் தொழிலாளர்கள்: 
இந்தியாவில் 3வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் உணவின்றி தவிக்கும் புலம்பெயர் கூலித்தொழிலாளிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் தொழில்துறைகளின் பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. 
credit ns7.tv